Sunday, September 11, 2011

மகள் பட்டாம் பூச்சி


மென்பனியை உருக்கும் பொன்வெயிலில்
கீழிறங்கும் வண்ணக்காகித க்ளைடராய்
தொட்டுத் தொட்டு விளையாண்ட
தோட்டத்துப் பட்டாம்பூச்சிகள் எங்கே போயிருக்கும்
பூண்டுச் செடிகள் பிடிங்கி துரத்திப்பிடிக்க
ஓடிய குழந்தைகளின்
டிவிப்பொட்டிக்குள் மறைந்திருக்கலாம்

பாவனை பட்டாம்பூச்சிகள் இந்த கவிதையைப்போலவே
எங்கேனும் இருந்திடலாம் என்றெல்லாம்
சொல்லி முடிக்கையில்

இங்கே இருக்கிறேன் கென் டாடி
உனக்கே உனக்கான பட்டாம்பூச்சி
என்றழைக்கிறாள் செல்ல மகள்
ஜெஸிரா ஃபாத்திமா.

Tuesday, August 30, 2011

தேவதையின் சிறகுகள்


சிறு பறவையொன்றின் சிறகுகள்
பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்
எதுவும் புரியாமல் ஜெஸிரா
பார்த்துக்கொண்டிருந்தாள்
பறவையைத் தெரிய
பறவையாவதைப்பற்றி யோசித்திருப்பாளோ

தேவதைக்கு தெரியாத சிறகுகளா
என்றபடிக்கு விமானம் பற்றி பேச ஆரம்பித்தேன்
விரல் குவித்து வாயிக்குள் திணித்துக்கொண்டு
விமான சப்தமிடத்துவங்கினாள்